Aug 16, 2012

கதை கதையாம் காரணமாம்

எனக்கு தெரிஞ்ச அலுவலகத்துல ஒரு துறை மேலதிகாரி இருந்தார்.
ஆண் பெண் பேதமில்லாமல் எல்லா ஊழியர்களிடமும் நகைச்சுவையாக , அருமையாக பேசுவார். எனக்கு நல்ல நண்பர் .
அவருக்கு கீழே வேலை செய்யும் ஒரு பெண் அவரை ஒரு தலையாக தீவிரமாக காதலிப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் எங்களிடம் தெரிவித்தது. அந்தப்பெண் குடும்பத்துக்காக உழைத்துக்கொண்டிருப்பதாகவும் , காதல் கீதல் என்றால் அந்த பெண் வாழ்க்கை சீரழியும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. அதிகாரிக்கோ சில மாதங்களில் பரியம்.




' இதை எப்படி கையாள்வது பிசாசு ?? ' என்று என்னிடம் வந்தார்.
இது கொஞ்சூண்டு சிக்கலான பிரச்சனை ஓரிரு நாளில் இதை முடிச்சுடலாம் என்றேன். பயபுள்ளைக்கு அவசரம் தாங்க முடியல. அவருடன் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் உதவியை நாடினார். சென்னையில் பிரபலமான ஒரு மது விடுதியில் இருவரும் சரக்கை நாட்டு நாட்டு என நாட்டிக்கொண்டிருந்தபோது அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அதை அடுத்த நாளே செயல்படுத்தினார். அந்த பெண்ணின் நெருங்கிய தோழி இவரது துறை உதவியாளர் என்பதால் , அந்த பெண்ணும் தோழியும் ஒன்றாய் இருக்கும் சமயமாய் பார்த்து அவரது உதவியாளரிடம் ' நான் பயங்கர குடிகாரன். தினம் சரக்கடிக்காமல் தூக்கமே வராது. பின்னிரவில் தூக்கம் விட்டா அப்போ கூட எழுந்து குடிப்பேன் ' என்றார். இதையறிந்த அந்தப்பெண்ணின் தோழி அவருக்கு அறிவுரை கூற அந்தப்பெண்ணும் அவரை விட்டு விலகினார். அப்பாடா தொல்லை முடிந்தது என்று நிம்மதி பெருமூச்சு விட்ட அவர் , 'எப்ப்ப்ப்ப்பூடி' என நக்கலாக பார்த்தார்.

சில மாதம் போனது ......

பதவி உயர்வு வழங்கும் தருணம் வந்தது. ஒரு முக்கியமான இரவு நேர திட்டப்பணிக்கு இவரை நியமிக்கலாமா என்று உயரதிகாரிகளின் கூட்டம் போடப்பட்டது. அந்த திட்டப்பணிக்கு மட்டும் இவர் தலைமை நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஊதியமே இலகரத்தை தொடும். கண்ணாலம் வேற ஆகப்போற தருணத்தில் பயங்கர குதூகலத்தில் இருந்தார் அவரு. எல்லாரையும் அவர் வீட்டு வேலையாள் மாதிரி நக்கலா பேச துவங்கினார். ' ஆமா தம்பி நீ வச்சிருக்கிற வண்டி இருவது இலட்சமாமே ... வண்டி எப்படி வாங்கணும்னு நான் சொல்லித்தரேன் அடுத்த மாசம். செம வண்டி. விலை முப்பது இலட்சம். பாத்து கத்துக்கோ' எனவும் ' அலுவலக வண்டி யாருக்கு வேணும் ?? ' எனவும் ரகளைகள் நீண்டது.
உயரதிகாரர்களின் கூட்டத்தில் ஐயாவைப் பற்றி காரசாரமாய் விவாதித்தார்கள்.. புதுப்பேட்டை படத்தில் கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்களே அப்படி. இவரது பக்கம் பலமாய் போய்க்கொண்டிருந்த நேரத்தில் ஒரு அம்மணி வாயிலாக ' அவருக்கு தண்ணியடிக்காம தூக்கமே வராதுன்னு அவரே அவர் உதவியாளர்கிட்ட வெளிப்படையா சொல்லியிருக்கார்.. அவர நம்பி எப்படி இந்த திட்டத்தை கொடுக்கிறது ?? பொம்பளப் பிள்ளைங்க வேற இருக்கு ' ன்னு அலுவலக தலைமைக்கு வேறு வழியாக கிசு கிசு சென்றிருக்கிறது...
பிறகென்ன
ஐயாவிற்கு அடுத்த மூணு வருசத்துக்கு ஆப்ப நல்ல ஆழமா சொருகி வச்சிட்டாங்க.. பாவம்...
இன்னைக்கு நான் கையெழுத்து போட்டு ஐயா ஊதிய உயர்வு வாங்கப்போறார்.

சில பேரு இப்படித்தான் இராச தந்திரத்தை செயல்படுத்தறேன்னு  பாழாப்போன நண்பனின் அறிவுரையை கேட்டுக்கிட்டு மொக்கையாகி விடுகிறார்கள். ஆப்பும் அடிக்கப்படுகிறது.
( நீதி : இத யாருக்கும் குறிப்பிட்டு சொல்லல. நீங்களாவே ஒரு நல்ல கருத்த புரிஞ்சுக்கோங்க. அட கலைஞரை ஏம்பா இழுக்கறீங்க. நான் சும்மா இருக்கறது உங்களுக்கு பிடிக்காதே .........  )

 - பி கே

No comments:

Post a Comment

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.