Jul 5, 2012

போடா ! இரசினியே எங்க பக்கம் இருக்கார்



என் அடி மனதில் எப்போதுமே ஒரு நடிகனின் இரசிகன் மெல்லமாய் உறங்கிக்கொண்டிருக்கிறான். 
கருத்து அறியாத வயதில் 
தன் வயதையொத்த எல்லா பாலர்களைப் போலவே 
இவனும் திரிந்திருக்கலாம் . 

விரல் சூப்புவதற்கு பதிலாக விரல்காட்டி சவால் விட்டிருக்கலாம் . பெற்றோர் , உற்றோர் சாட்சியன்றி நாம் எதையும் உறுதிப்படுத்த முடியாது .
ஆனால் , நானோ அப்படித்தான் நான் திரிந்தேன்
ஆட்காட்டி விரல் காட்டி மிரட்டியிருக்கிறேன் ,
சவால் விட்டிருக்கிறேன்
ஆனால் . எந்த நடிகனும் என்னை கவர்ந்ததே இல்லை .
 ' எம் புள்ள இரசினி  இரசிகன் ' என என் பாலக நண்பர்களின் பெற்றோர் சிலாகித்து சொல்லும்போது கூட ....

கருத்து தெரிந்த வயதில் 
இரசினி படம் தேடிப்போய் பார்த்ததுண்டு 
திரையரங்க சீட்டுக்காக காத்திருந்ததுண்டு , என் கொடுமை தாளாமல் கூடவே பெற்றோரும் ....

பள்ளி முடிந்து தந்தைக்காக காத்திருக்கும் வேளையில் பொழுது போக இருக்கும் சொற்ப சில்லறையில் இரசினி பட பாட்டுப்புத்தகம் வாங்கி , வகுப்பு நண்பனுடன் மரத்தடியில் ஒன்றாக ஒரே குரலில் சத்தமாய் பாடுவதும் நடந்தது .
மரத்திலிருந்த பறவைகளும் ஏனோ நாங்கள் பாடத்துவங்கியதும் அலறிக்கொண்டே சிதறவிடும். அநேகமாக யாரேனும் கல்லெறிந்திருக்கக்கூடும் . அதை விடுங்கள் .


பாட்சா பார்த்தோம் ,
முத்து  பார்த்தோம் ,
படையப்பா பார்த்தோம் ,

சந்திரமுகி பார்த்தோம் ,
அட ...
எந்திரன் கூட பார்த்தோம் ........



விசிலடிப்பதில் வித்தகர் பட்டமும் ,
கைத்தட்டுவதில் கலைஞர் பட்டமும் ,
தலைவா எனக் கூக்குரலிடுவதில்
தங்கப்பதக்கமும் கொடுத்திருக்கப்பட வேண்டும்.
கண்டுக்கொள்ளவில்லை இச்சமூகம்.
மும்முரமாய்நாள் முழுதும் உன் படம் பார்த்ததற்கு குறைந்தது முனைவர் பட்டமாவது கொடுத்திருந்திருக்க வேண்டும் .
நானும் வருத்தப்படவில்லை .
வரவிருக்கும் உன் படத்தை பார்க்க காத்துக்கொண்டிருந்தேன் .
முதல் நாள் , முதல் காட்சியின் சீட்டு வாங்க காசு சேர்த்துக்கொண்டிருந்தேன் , 
நள்ளிரவில் மொட்டைமாடியில் வீட்டு உண்டியல் உடைத்து.
அண்ணனின் சொக்கா  , 
அக்காவின் வடிவவியல் டப்பா , 
அம்மா சில்லறை போட்டுவைக்கும் சமையலறை அஞ்சறைப்பெட்டி எனத் தீவிரமாகத் தொடர்ந்தது .

உன் படமும் வெளிவந்தது ,
தலைவா ,
உன் படத்திற்கு பால் முழுக்கு செய்ய காசு கேட்டார்கள்.
திரையரங்க சீட்டு வாங்கவே பாதி கள்ளனாய் மாறிவிட்ட கதை எனக்கு மட்டும்தான் தெரியும் . உன் தட்டிக்கு பாலூற்ற முழுக் கள்ளனாய் மாறினால் தான் உண்டு .
தேடினேன் , அலைந்தேன் , கெஞ்சினேன் , பிச்சையெடுக்க மனம் வராததால் மிஞ்சிய மானத்தைக் காப்பாற்ற நண்பனிடமே கடன் வைத்தேன் .

அரை வயிற்று பசியோடு , 

அடிவயிற்று கத்தலோடு 
உன் படம் தான் பார்த்தேன் தலைவா .
அப்பொழுது  எனக்கு அறிவுரை சொல்ல யாருமில்லை 
கடன்வாங்கி பார்க்க கூடாதென்று.
நீ  குறைந்தது படத்திலாவது 
வசனம் வைத்திருக்க வேண்டும் தலைவா , 
படம் பார்க்க பிச்சையெடுக்க வேண்டாமென்று .
உன்னை திரையில் காணும் ஆர்வத்தில் அதெல்லாம் இந்த மூளைக்கு உரைக்கவில்லை .

உன் பெயர் படம் முழுக்க கத்தி கத்தி தலைவலி வந்தது தலைவா . அசரவில்லை .
வலியுடன்  வீடு திரும்பினேன் .

சோர்வும் , பசியும் , சீட்டு வாங்க நடந்த மோதலில் , வென்று கிழிக்கப்பட்ட  அப்பா காசில் ஆசை ஆசையாய் வாங்கிய சட்டையும்தான் மிச்சம்.
பசிக்கு ஒரு துண்டு பன் கூடத் தரவில்லை தலைவா அந்த திரையரங்கத்துக்காரன் . பெரிய பானையில் அல்லது நிலைவெள்ளி பாத்திரத்தில் தண்ணீர் வைப்பதோடு சரி . அது எத்தனை நாள் பழையதென நாங்கள் அறிந்ததில்லை . எங்களைத் திருடனென்று கணித்து திரையரங்க நிர்வாகி வைத்த சங்கிலியுடன் பிணைக்கப்பட்ட குவளையில் போட்டி போட்டு மொடக் மொடக்கென்று ஓசி குடிநீர் பருகுவதோடு சரி .

இத்தனை சாதனைகள் செய்து ,
அசதியுடன் வீட்டிற்கு திரும்பினால்
காட்டிக்கொடுக்கப்பட்டிருப்பேன் .
இல்லை
நானே மாட்டிக்கொண்டுவிடுவேன்.

தலைவா ,
அதெல்லாம் நீ பார்த்திருக்க மாட்டாய் .........

அவ்வளவு பெரிய பர்மா தேக்கு திண்ணையில் ,
என் கரங்களை கயிறு அல்லது என் டாமியை அவிழ்த்துவிட்டுவிட்டு அதன் சங்கிலியால் கட்டப்படும் நிலை .

சிறிது சிறிதாக திருடி , 
இறுதியாக படம் பார்க்க செல்கையில் எதற்கும் இருக்கட்டுமென தாத்தாவின் சொக்காவில் கைவிட்டு சில சில்லறைகளை அள்ளியதை , கண்ணு தெரியாது என நான் தீர்க்கமாக நம்பிய அஞ்சலை ஆயா சுபயோக சுபதினத்தில் பார்த்து அப்பாவிடம் நல்ல நேரத்தில் போட்டுக் கொடுத்திருந்தது .
நானோ முழுக் கள்வனாக்கப்பட்டேன்..
அடி எட்டப்பி .......

தண்டனைகள் தீர்மானிக்கப்பட்டன ,
நான் தூணோடு பல்லியாக பிணைக்கப்பட்டிருந்தேன்.
எங்கிருந்தோ என்னை பிடிக்காத எதிரியால் புளிய மிளார் வழங்கப்பட்டிருந்தது .

தலைவா நீ பார்த்திருக்க மாட்டாய் ,

அந்த மிளாரின் சரிசம அளவில் என் முதுகெங்கும் வரிக்குதிரைப் போல, அணில் முதுகில் இராமர் தடவியதைப் போல குச்சி  தொட்ட இடமெல்லாம் சிவந்து நீண்ட கோடுகளாக தெரிந்த கொடுமையை .


சில நிமிடங்கள் என் அலறலோடு  ஒரு நிகழ்வு அரங்கேறும் .
அது முடியும்போது , 
வெற்றுடம்பில் என் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தோடி , என் அரைக்கால் சட்டையை நனைத்து என் முழங்கால் தாண்டி தரைத்தொட்டிருக்கும்.

உன் படத்தில் உன்னை இதே போல் அடித்தார்களே என எண்ணி வலியைத் தாங்கிக் கொள்ளுவேன் .

பசி , சோர்வு , அரை மயக்கத்தில் நெளிவேன் .
அசைவு தெரிந்து தொடையிலும் காலிலும் அடி விழும் . 
தொண்டை வலியில் குரல் கம்மும்.
தூணுக்கு துணையாக கட்டிக்கொண்டிருப்பேன் .

பின்னிரவு வரும் ...

தாத்தா வீடு திரும்பும்போது தான்
என் கட்டவிழ்க்கப்படும்.

தலைவா 
நீ  பார்த்திருக்க மாட்டாய்.

கைக்கட்டி நான் நிற்கையில்
சொந்தங்களின் முன்னால்
குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்படும்
நானோ கூனிக்குறுகி சுவற்றோரம் நிற்பேன் .
தூங்கப்போவேன் ....


அடுத்த நாள் காலை எழும்பி
உன் படத்தை புத்தகத்தின் நடுவில் வெகு சுறுசுறுப்பாய் வைத்து 
பள்ளிக்கு கிளம்பிவிடுவேன் ...


அதெல்லாம் விடு தலைவா ,
வலியெல்லாம் என்னோடு
போகட்டும் .

இதோ ,
இருபது வருடங்களாகி விட்டன .
நீ வளர்ந்த மாநகரத்தில் படித்து ,
சிங்கார கூவ நகரத்திற்கு வந்துவிட்டேன்.
மாநரக வாழ்க்கையில் இணைந்துவிட்டேன்.

குளு குளுஅறைகளுடன் அலுவலகம் ,
குன்றாத வயதுடைய , 
கொள்ளை அழகு பெண்களுடன் பணி ,
கொழுத்த ஊதியம் ,
கொட்டிக் கொடுத்து வாங்கிய பளபளக்கும், 
சில இலகரங்களை உறுஞ்சிய
மகிழுந்து வண்டி ,
அருமையாய்த்தானிருக்கிறது வாழ்க்கை .

உன் படம் வந்துவிட்டால் போதும் .
சீட்டு ஆயிரமென்றால் கூட பத்து பேருக்கு சீட்டு வாங்கக்கூடிய திறன் படைத்த நண்பர்கள் சூழ இருக்கிறேன் ,
அதும் அழகிய பெண்களென்றால் எவ்வளவு தொகை கொடுத்தேனும் ........

பளீரிடும் கற்கள் பதித்த திரையரங்கில் ,
சில பல நூறுகளை 
செலவு செய்து வாங்கப்பட்ட நொறுக்குத்தீனிகளுடன்
படம் பார்க்கிறோம் ,
சிரிக்கிறோம் ,
கோபப்படுகிறோம் ,
சீறுகிறோம்,
கொஞ்சம் அழுகிறோம்,
நெகிழ்கிறோம் ,
கைத்தட்டுகிறோம்,
அதோடு எழுந்து வந்துவிடுகிறோம் ...

தலைவா  ,
உனக்குத்  தெரிந்திருக்கும்.
உன் படம் பார்க்க ஆயிரங்களைக் கொட்டிக் கொடுத்து பலரும்
படம் பார்க்க வருவது.
நாங்கள்  மாநகரவாதிகளாகிவிட்டோம்.
சில சில்லறைகளுடன் 
அரைக்கால் சட்டையுடன் படம் பார்க்க வந்த 
அந்த பிசாசுக்குட்டி இன்றில்லை.
காலம்  மாறிவிட்டது .


நீ மிக எளிமையானவன் என 
பேஸ்புக் பக்கம் திறந்து சில ஆயிரம் பயனாளர்களுடன்
உன் பெருமை பேசி கூவிக்கொண்டிருக்கிறான்
உன்  முதிர்ச்சிப் பெறாத இரசிகன் ஒருவன்

நாற்பது  வயதைக் கடந்த ஒரு பெருசோ
நீ அவரது தலைவரென சண்டைக்கு வருகிறது
என் வீட்டில் ஒட்டப்பட்ட உன் பட சுவரொட்டியை கிழித்ததும் ....

தலைவா உனக்குத் தெரிந்திருக்கும் ...
எவ்வளவு  பெரிய பணக்காரனானாலும் 
தங்க செருப்பு போட்டுக்கொண்டு திரிய முடியாதென .
இருந்தும்
நீ கதர் சட்டைப் போட்டிருப்பதைக் காட்டி
எளிமையின் சிகரமென வானாளவு கத்துகிறான்
உன் பெருமை பேசி ...
 
உன்  மகளின் திருமணத்திற்கு உன்னை உயிராய் மதித்த எந்த இரசிகனுக்கும் அழைப்பு வரவில்லை தலைவா .

உனக்குத் தெரிந்திருக்கும் .
உன் இரசிகன் என்பதால் ஒரு புற்றுநோய் தொற்றிய சிறுவனை நீ சந்தித்ததை நாங்கள் படித்தது .
உனக்குத் தெரியாததில்லை
உன் உயிர் இரசிகனாக ஏதோ ஒரு மருத்துவமனையில் அடிக்கடி பிரியும் ஏழை உயிர்கள் .
குடிசையில் குப்பத்தில் இருந்து
உன் படம் பார்க்க வரும் இரசிகன் 
இரவெல்லாம் கண் விழித்து திரையரங்கத்தில் தட்டி கட்டும் இரசிகன்,
சொந்த காசைப் போட்டு பாலூற்றும் இரசிகன்,
உன் படம் போட்ட சட்டையில்
உன்னைப் போலவே வாழும் 
உன் இரசிகன்.

எனக்குத் தெரியும் ...
தலைவா நீ ஆணையிடு என்று தவமிருந்த இரசிகனுக்கு
நீ  ஒரு நாளும்
பிழைக்க வழிகாட்டியதே இல்லை ...
பெருமை மட்டும் பீறிடுகிறது உன் இரசிகனுக்கு , 
உன் இரசிகனென்று .

உன்னை சந்திக்க அடித்துப் பிடித்து வந்தால் 
நீ உன் குருநாதரைப் பார்க்க மலைவாசம் போவாய் ,
உன்னை இதயத்தில் நிறுத்தி வாழும் நாங்கள் 
உன் வரவைக் காண 
உன் வீட்டு வாசலில் 
குறுகி நிற்பதை அறியாமல்.

எனக்குத் தெரியும் தலைவா ...

உன்  இரசிக இனம் ,
கொத்துக்கொத்தாய் மடிந்து போய் 
நாங்கள் கதறும்போது  ,
மராட்டியனாய் , கன்னடனாய் வேடிக்கைப் பார்த்தாய்
காதுகளை மூடிக்கொண்டு .
ஒக்கனேக்கல் பிரச்சனையில் 
தமிழனுக்கு ஆதரவாய் வசனம் பேசி
பின்னர் கன்னடனிடம் 
நீ மன்னிப்புக் கேட்டாய்,
உன் படம் அமைதியாய் வெளிவர வேண்டி .

எனக்குத்  தெரியும் தலைவா ,
நீ வேடிக்கை மட்டுமே பார்ப்பாய்.
அவ்வப்போது அருமையாய் சிரிப்பாய் 
வசனம் பேசுவாய்
தத்துவம் பேசுவாய்
கைத்தட்டல்  வாங்குவாய்
பைசா பிரயோசனமில்லை அதனால்.
ஆனால்,
அதனால்
ஏமாந்த சனமோ பல கோடி .


இங்கிருந்து 
ஊழலை ஒழிக்க
அன்னா அசாரேவுக்கு ஆதரவு கொடுப்பாய் ,
ஆதரவின்றி போராட்டக்களத்தில் 
அனாதையான எங்களுக்கு 
கண்ணுக்குத் தெரியாத
அல்வா ஊட்டுவாய் .

நீ நாட்டிற்கு 
நல்லது செய்ததை ,
மக்களுக்காக அயராது உழைத்ததை எண்ணி 
அகமகிழ்கிறேன் தலைவா
கனவில் மட்டும்.
அதான்  என்னால் மட்டுமல்ல
எல்லாராலும் முடியும் .


அம்பது  இலகரம் மதிப்புள்ள 
குளு குளு வண்டியில் வருகிறோம் தலைவா 
உன் படம் பார்க்க .
அன்று அடி வாங்கிய , 
இன்று அடி வாங்கும் 
உன் நிகழ்கால பைத்தியங்களுக்கு 
என்ன வழிகாட்டினாய் நீ ???

ருத்திராட்சம் காட்டினாய் ,
இராகவேந்திரர் காட்டினாய்,
பாபா காட்டினாய் ,
இமயம் காட்டினாய் ,
பக்தி காட்டினாய்,
மண்டபம் கட்டினாய்,
போயசில் வீடும் கட்டினாய்.

தலைவா 
என் வீட்டு வேலைக்காரன் ,
உன் பரம இரசிகன்
மழைக்காலத்தில்
அண்டுகிறான் என் வீட்டில்
குடை வேண்டி
அவன் வீட்டு கூரைகளெல்லாம் 
வானம்  பார்த்துக்கொண்டிருக்கிறது.

தலைவா 
உனக்குத் தெரிந்திருக்கும் ....
உன்  படத்திற்கு
பாலில் முழுக்கு நடைபெறுவது .
பசிக்காக அப்பாலை ஊற்ற சொல்லி கேட்டும் பார்த்துவிட்டோம்.

பூனைத் தூங்குகிறது
உன் இரசிகன் வீட்டு அடுப்பில் .
பணம் கொழுத்து 
உன்  படம் பார்க்க வருபவனை மட்டுமே
மனிதனாக பார்க்கிறாய் போலும் .

நீ உடல் நலம் குன்றியிருந்த நேரத்தில்
உன் இரசிகர்கள் செய்த கோமாளித்தனங்களை
நானும் தமிழகமும் மறக்கவில்லை .
அதே நேரத்தில்
உடைந்த உன் குரல் கேட்டு
நாங்கள் உடைந்ததை
நீ அறிந்திருக்கவில்லை .

உனக்காக பேஸ்புக்கில் ஆள் சேர்த்த நேரத்தில் ,
இச்சமுதாயத்திற்காக உழைத்திருந்தால் 
என்  இனம் எப்போதோ 
விளங்கியிருக்கும் தலைவா .
உன் வெறிப்பிடித்த இரசிகர்கள் தான்
இவ்வினத்தின் முடக்குவாதம்..

அன்று அடி வாங்கி ,
இரணகளப்பட்டு,
உன் இரசிகனென பெருமைப்பட்டு
உன் பெயர் பரப்பிய உயிர் இரசிகர்கள்
இன்று  மறைந்துவிட்டார்கள் தலைவா !!!
இல்லை  இல்லை
புத்தி தெளிந்துவிட்டார்கள்...

மட்டைப்பந்து வீரர் இம்ரான் கான் மக்களுக்காக
பாகிசுத்தனில் மருத்துவமனை காட்டினாராம்,
இங்கோ
உன்  இரசிக சிகாமணிகள்
உனக்கு கோவில் கட்ட சிந்திக்கிறார்கள் தலைவா,
தன் காசைப் போட்டு.

' வாழ்க்கையில் ஆயிரம் தடைக் கல்லப்பா ' என நீ நடித்த இடத்தில்
ஓங்கி எதிரொலித்த விசிலும் , கத்தலும் ,
' பணக்காரன் பணக்காரனாகிறான் ,
ஏழை ஏழையாகிறான் ' என நீ வசனம் பேசிய இடத்தில்
எல்லாரும் கத்தும்போது ,
திரையரங்கத்தில் 
ஒரு வரிசை மட்டும் சத்தமின்றி வெறுமையானது ..
அதை நீ ஆழமாக கவனிக்கத் தவறி விட்டாய் தலைவா .

இறுதியாக ,........
போட்டிப்போட்டு
உன் படம் பார்த்த என் ஊர் கூட நகரமாகிவிட்டது.
முட்டிமோதிப்பார்த்த
அந்த திரையரங்குகள் திருமண அரங்குகளாகிவிட்டன.
காரை  பெயர்ந்த வீடும் , 
அப்பாவின் அடிகளும் பழசாகிவிட்டன.
என்  கோபத்துக்கு பயந்து
எப்போதும்  துடைத்து வைக்கப்பட்டிருக்கிறது
அப்பாவால் 
சுவற்றில் மாட்டப்பட்ட
கண்ணாடிப் போட்ட உன் புகைப்படம் .......

இவன் ,
இன்னமும் பேச விருப்பமின்றி
அமைதி காக்கும் ,
உன் இந்நாள் , முன்னாள் பைத்தியங்கள் ,
இரசிகர் மன்ற மொட்டைமாடி...

( பி கு : உனக்குத் தெரியாததில்லை . இன்னமும் உன் இரசிகனைப் பற்றி  , உன்னை விரும்பும் கோடிக்கணக்கான மக்களைப் பற்றி தெரியாவிட்டால் ' ரசினி பேன் ' என கூகிளில் தேடவும் )

அம்புடன் ->
^ பிசாசுக்குட்டி (எ) பி  கே ^

4 comments:

  1. அருமை நண்பா ... எங்கோ இருட்டு வாழ்கையில் வாழும் ஏழைகளுக்கும் உன்னை ஏற்றி விட்ட இந்த தமிழன் என்கிற முட்டாள் ஏணியை நீ எட்டி உதைததோடு எரித்தும் விட்டாய் ...

    ReplyDelete
  2. கிட்டுJuly 05, 2012

    சொல்வதற்கு எதுவுமில்லை. செய்வதற்கு நிறைய இருக்கிறது.

    ReplyDelete
  3. உன் படத்தில் உன்னை இதே போல் அடித்தார்களே என எண்ணி வலியைத் தாங்கிக் கொள்ளுவேன் .// ஹி..ஹி எல்லோருக்கும் இந்த இடத்தில தான் தலைவன் கடவுளாக அவதாரம் எடுக்கிறார் போல, ஏசுநாதரே சிலுவையில் அறையப்பட்டார் என்பது போல, தப்பு ஒன்றும் பண்ணாத ரஜினியவே கம்பத்துல கட்டி வச்சு ஆனந்தராஜ் என்ற கொடியவன் வெளுப்பான், மக்களுக்காக தலைவர் அனைத்தையும் போருத்து தாங்கிகொள்வார் ./.

    திரைக்கதை எழுதும் ஜாம்பவான்கள் இந்த காலத்தை விட முற்காலத்தில் சிறந்து விளங்கியுள்ளனர்..

    ReplyDelete
  4. it just entertainment... But in our tamilnadu.. not only rajni, kamal,vijay,vikram,ajith,dhanush, simbu etc.... Only entertainment..entertainment.. entertainment.....

    ReplyDelete

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.