May 13, 2016

ஓரம்போ , சீமான் வண்டி வருது

அதாகப்பட்டது மக்களே,
வானத்துல விமானம் பறக்குது,
தரையில் தொடர் வண்டி ஓடுது,
சாலையில் வண்டி ஓடுது.

இது சீமான் ஆதரவு பதிவல்ல.
ஆனா நம்ம மக்களுக்கு யார் நமக்கு என்ன செஞ்சாங்கன்னு பார்க்கிறத விட, அவங்க என்ன வச்சிருக்காங்க, என்ன செய்யறாங்கன்னு பார்க்கிறதில் மிகுந்த ஆர்வமும், அதிலொரு இன்பமும் உண்டு. அதனாலேயே நானறிந்த விடயங்களை இன்றுத் தெளிவாக சொல்லிவிடுகிறேன்.

அதில் மிகுதியா இந்த தமிழ் தேசிய எதிர்ப்பு கும்பல்கள் பேசுவது சீமான் என்ன வண்டி வச்சிருக்காரு தெரியுமா? அந்த வண்டி விலை தெரியுமா என்றுதான். அதிலும் முத்தாய்ப்பாக கடலூரில் நேற்று சீமானை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் த.பெ.தி.க. சென்னை மாவட்டச் செயலாளர் -ச.குமரன் அவர்கள் சீமான் 60 இலட்ச ரூபாய் வண்டி வைத்திருக்கிறார் என்று ஒரு போடு போட்டார்.
எனவே, அவர் வண்டி மட்டுமல்லாமல் மேற்படி எல்லா வண்டிகளையும் பத்தி இன்னைக்கு விரிவாக சொல்லிடறது நல்லதுன்னுதான் நானே பல வருடம் கழித்து களமிறங்கிட்டேன்.

சீமான் வண்டி


அதாகப்பட்டது,
சீமான் நானறிந்து 2008 வாக்கில் எண்டேவர் எனும் மகிழுந்து வைத்திருந்தார். 2008 திசம்பர் மாதம் இராசீவ் காந்தியை விமர்சித்ததாக சில காங்கிரசு களவாணிகள் அவரது வண்டிக்கு தீ வைத்தனர். அதில் சீமானின் வண்டியின் பின்புறமும், சக்கரமும் சேதமடைந்தது.
சரியா ???
அப்போது புது எண்டேவர் வண்டியின் மதிப்பு 17 இலட்சம்.
( அதன் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட எண்டேவர் அரிக்கேன் வண்டியின் விலை 21 இலட்சம் )
ஆச்சா ???
சீமானின் 60 இலட்ச ரூவா வண்டி என்று சொல்லப்படுகிற இசுசு எம்.யூ 7 மகிழுந்து.

அதன் பிறகு, அந்த வண்டியை விற்று வங்கிக் கடன் மூலம் மேற்கண்ட வண்டி வாங்கியதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வண்டியின் நிறுவனப்பெயர் இசுசு. 2013 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வண்டி 60 இலட்ச ரூபாய் என்று புதுக்கதை சொல்கிறார்கள். இதன் விலை 23 இலட்ச ரூபாய் [சான்று].
'இது மட்டும் விலையுயர்ந்த வண்டியில்லையா?' என்பவர்கள் , ஏற்கனவே வைத்திருந்த வண்டியை விற்று விட்டு புது வண்டியை வாங்கிய ஒரு கட்சித்தலைவரை இவ்வளவு கேட்கும் இவர்கள், ஏன் இதுவரை ஆட்சியில் அமர்ந்துக்கொண்டிருக்கும் தலைவர்களை கேள்வி கேட்கவே மாட்டேங்கிறார்கள் என்பது புரியவில்லை. 
சீமானுக்காக வக்காலத்து வாங்குகிறேன் என்று பொருளில்லை, தோழரொருவர் கேட்டது போல 'அப்ப அவர் என்ன செய்தாலும் முக்கியமில்லை, என்ன மகிழுந்து வைத்திருக்கிறார் என்பதுதான் முக்கியமா?' என்பதே சரியாகப்படுகிறது.

மேலும்,
நடைபெறவிருக்கும் தேர்தலில் வேட்பு மனுத்தாக்கலில் சீமானுக்கு ரூ. 35.36 லட்சம் சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் தனியார் வங்கியில் ரூ. 8.97 லட்சம் கடன் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரிடம் ரூ.26.50 லட்சம் மதிப்பில் ஒரு காரும், ரூ.4.50 லட்சம் மதிப்பில் மற்றொரு காரும் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.வண்டி மதிப்பே  60 இலட்சம் என்றால், அப்புறம் எப்படியா சொத்து மதிப்பு 35 இலட்சம் வரும்??? குமாரசாமி கும்பலா நீங்க??


சரி,
மேற்படி பார்ப்போமா.


தலீவர்:


தலீவர் பயன்படுத்தும் வண்டியை பார்த்திருக்கிறீரா? அந்த வண்டியைப் பற்றி 2013 ஆம் ஆண்டு சனவரி மாதமே எனது பேசுபுக் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.
எனவே,
சீமானுக்கு வக்காலத்து வாங்கிதான் பேசுகிறேன் என்று சில காளான்கள் இங்கே பேச வரும். அவர்களின் கவனத்திற்கு.
சரி, சேதி இதுதான்.


தி.மு.க. தலைவர் கலைஞர் தாக்கல் செய்த சொத்துப்பட்டியலில் அசையும் சொத்துகள் ரூ.13 கோடியே 42 லட்சத்து 51 ஆயிரத்து 536 என்றும், அசையா சொத்துகள் எதுவும் இல்லை என்றும், தனது பெயரில் வீடு, வாகனங்கள் எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். [சான்று]

ஆச்சா,

ஆனால், தலீவர் அவர்களை சுமந்து செல்லும் இவ்வண்டியைப் பற்றி கேட்டீர்களேயானால் வாய்ப்பிளந்து போவீர்கள். தலீவர் உங்களுக்காக எவ்வளவு கடினப்படுகிறார் என்பதை அறிந்து வருந்துவீர்கள்.

இங்கு நான் சொல்வதை பொய் எனலாம், போலி எனலாம். ஆனால், சோகம் என்னன்னா, இருசக்கர, நாற் சக்கர வண்டிகளைப் பற்றி செய்திகளை வெளியிடும் drivespark.com, ஏற்கனவே தலீவரின் வண்டியைப் புகழ்ந்து ' எழுதுகோலை ஊன்றுகோலாக்கி உயர்ந்த தலைவர் கருணாநிதியின் கார்! ' எனும் தலைப்பில் செய்தியை விரிவாக வெளியிட்டு விட்டது. அதும் நான் பதிவு எழுதிய ஆறு மாதம் கழித்து.
  • திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த சில வருட காலமாக பயன்படுத்தும் இம்மகிழுந்து வண்டியின் பெயர் ' டொயோட்டா ஆல்பார்ட் '
  • இதன் மிகப்பெரிய சிறப்பு, இதன் உள்ளமைப்பும் , இருக்கையும் வயதானவர்களுக்கும் , மாற்றுத்திறனாளிகளுக்கும் ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளதும் தான்.
  • இரண்டு வருடத்திற்கு முன்பு (2011) இதன் விலை 1,91,000 அமெரிக்க டாலர்கள் என்றும், தற்பொழுது தாய்லாந்தில் உள்ள இதன் பூர்வீக தொழிற்சாலையில் இதன் விலை இந்திய மதிப்பில் 71,88,000 ரூபாய்கள் என அலுவல்பூர்வமற்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • கருணாநிதி அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.37 இலட்சம் எனவும் , இவரது அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.4.93 கோடி எனவும் அப்போதைய தேர்தல் (2011) மனுத் தாக்கலில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்தியாவில் இந்த வண்டி (மினி வேன்) விற்பனைக்கு இல்லை. இறக்குமதி செய்தே வாங்கினர். இறக்குமதி வரி உள்பட இந்த மினி வேனின் விலை இந்தியாவில் ஒரு கோடியை நெருங்குகிறது.

சரியா ??

ஒரு கோடி சொச்சமுள்ள இந்த வண்டி, 2011ம் ஆண்டில் ஆண்டுக்கு ரூ.37 இலட்சம் வருமானமுள்ள ஏழைக்கு எப்படி வந்துச்சுன்னு கேட்டால் உடன்பிறப்புகளின் அன்பளிப்புனு சொல்லிட்டா விசயமே முடிஞ்சது

இதை எவனாவது கேட்டிருக்கானா ??? ஏன்னா தமிழ் தேசியக்காரன் ஒரு ஓட்டை மிதி வண்டி வைத்திருந்தால் கூட கண்களை உறுத்தும்.

இன்னும் முடியல,

தலீவர் குடும்பத்தில் உள்ள வண்டிகள்.

2007 இல் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு கனிமொழி போட்டியிடும்போது தாம் ரூ. 18.7 லட்சம் மதிப்புள்ள டோயோட்டா காம்ரி கார் வைத்திருப்பதாக குறிப்பிட்டார். அப்ப அவர் என்ன பதவியில் இருந்தார் ???
எந்த பதவியிலுமே இல்லாதவர் 2007 இல் உண்மையான விலையான 23 இலட்சம் கொண்ட காம்ரி வண்டியை எப்படி வைத்திருந்தார் என்று எவராவது கேட்டானரா??? இல்லை. ஏன்???

மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி வரி ஏய்ப்பு செய்து வாங்கியதாக குற்றஞ்சாற்றப்பட்டு அவரின் அம்மர் காரை சிபிஐ அதிகாரிகள் 2013 ஆம் ஆண்டு மே மாதம் கையகப்படுத்தினர். [சான்று] .   [ஆங்கிலம்]
சிபிஐ விசாரணைக்குப்பிறகு திரும்ப வண்டியை அவரிடமே ஒப்படைத்தனர்.

உதயநிதி ஸ்டாலின் வாங்கிய கார் அம்மர் HUMMER H3 SUV வகையாகும். 
HUMMER H3 SUV தயாரிப்பே, சிபிஐ விசாரணை நடந்த 3 வருடங்களுக்குமுன், கடந்த 2010-ம் ஆண்டே நிறுத்தப்பட்டு விட்டது.

அண்ணனின் வண்டி
இதன் விலை வரியுடன் சேர்த்து, இந்தியாவில் சுமார் ரூ. 2 கோடி என்கிறார்கள்.

உதயநிதியின் அப்பா ஸ்டாலின் வைத்திருப்பது, ரேஞ்ச் ரோவர் கார். டாடா கூட்டுத் தயாரிப்பதில் இந்தியாவில் தயாராவதால், விலை சுமார் 1 கோடி மட்டுமே. எவ்வளவு எளியவர்???
ஆனால்,
தனது 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் வேட்பு மனுவில் தனக்கு சொந்தமாக வண்டி ஏதுமில்லை என குறிப்பிட்டிருக்கிறார் !!!!!!!
ஆனால் அசையா சொத்தாக 80 இலட்ச ரூபாயை குறிப்பிட்டிருக்கிறார்.
சற்றே குழப்பவில்லை?? [சான்று]

இவரின் பணியும் பொது சேவையாம். கேட்டுக்கோங்க.

சில நாட்களுக்கு முன்பு நண்பரின் கண்களில் திருவான்மியூர் அருகே தென்பட்ட அண்ணன் உதயநிதியின் எளிய வண்டி. இதன் பதிவு எண்ணையும் பாருங்க ...
இவங்களே இப்படின்னா அம்மாவை விட்டுட்டா உடனே என்னைய அதிமுகன்னு முத்திரை குத்திடுவாங்க.
ஆனால், அந்தம்மா அப்பட்டமா ஏற்கனவே மாட்டிக்கிட்டாங்க.
முன்பு மிட்சுபிசி பசேரோ என்ற ரூ.40 இலட்ச ரூபாய் மதிப்பு கொண்ட வண்டியை வைத்திருந்தார். அதன் மதிப்பு ரூ.75 இலட்சமென்றும் கிசுகிசுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் வெளிவந்த உடன் வாங்கினார். அவருக்கு பிறகு சரத்குமார், வைகோ போன்றோர் வைத்திருந்தனர்.
இப்ப வைத்திருக்கும் வண்டியான டொயாட்டோ பிராடோ கதை இன்னும் பிரம்மாண்டம்.

முன்பு டொயாட்டா பிராடோ வண்டியையே பயன்படுத்தி வந்த அவர் சிறைக்கு சென்ற வண்டி என்று கருதி வேறு இரண்டு டொயாட்டா லேண்ட் குரூசர் 200 வகை சொகுசுந்துகளை புதிதாக வாங்கினார். டொயொட்டா லேண்ட் குரூசர் ப்ராடோ 200 ஒரு வண்டியின் விலையே கிட்டத்தட்ட ஒரு கோடியிலிருந்துதான் துவங்குகிறது. [சான்று].
இது போல அவரிடம் நான்கு சொகுசூர்திகள் இருப்பதாக 2015 சூன் மாத விகடனில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. குண்டுத்துளைக்காத வசதியும் கொண்டது. ஒரு ஊர்தியே கிட்டத்தட்ட ஒன்றரை கோடி என்றால் நீங்களேஎ கணக்குப்போட்டுக்கொள்ளுங்கள். 
வேட்பு மனுவில் ரூ.20 இலட்சம் மதிப்புள்ள பிராடோ சொகுசுந்துகள் இரண்டை வைத்திருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். 
ஆனால், அண்மைக்காலமாக பயன்படுத்துவது லேண்ட் குரூசர் வகை சொகுசுந்துகளைத்தான். எந்த வண்டியும் அவர் பெயரில் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.


அதாவது,
ஏன் இவ்வளவு கதைகளை சான்றுகளுடன் சொல்கிறேன் என்றால். இந்த வெத்து குறை கூறும் கும்பல் தமிழின துரோகிகளையெல்லாம் விட்டுவிட்டு, சும்மா யாராவது தமிழ் தேசியத்தைக் குறித்து குரலெழுப்பினாலே உடனே அவர்களை இனத்துரோகிகளாக முத்திரைக் குத்தி தங்கள் வழிக்கு வரும் வரை அவர்களை சீரழித்து விடும்.

இத்தனை கயவர்களை கொண்ட இம்மண்ணில் யாராவது ஏதாவது இதுவரை சிறு மூச்சுக்கூட விட்டிருக்கிறார்களா???  வீரமணியே என்ன வண்டி வைத்திருக்கிறார் தெரியுமா??? இப்போது ஒரு தமிழன் வண்டி வைத்திருந்தால் வரிமான வரித்துறை அலுவலர் மாதிரி அவரது சொத்துக்களை கணக்குப்போட்டுப் பார்ப்பது ஏன்????

இறுதியாக,
ஒரு தோழர் 'ஏங்க சீமான் விலையுயர்ந்த வண்டி வச்சிருக்காரு?' ன்னு நான் கேட்டதுக்கு பதில் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.

சீமான் இப்படியோரு கார் வச்சிருக்காருப்பா...
அதுதான் பெரிய பிரச்சனை எதிர்க்கட்சிக்காரனுக்கு.
ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடி வச்சிருந்தா அது அவர் சொத்து.
ஆட்சிக்கு வந்து வாங்கிக் குவிச்சா அதுதான் நம்ம சொத்து.
உன் கட்சிக்கார தலைவனெல்லாம் மாட்டு வண்டிலையா போறான்?.
ஒரு நாளைக்கு 5 கூட்டம் 5 ஊர்ல சீமான் பேசுறார்.
உலங்கு வானூர்தி வாங்கித் தாரியா ??
ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே அண்ணன் கேட்டா நாளுக்கு ஒரு கார் இறக்குமதி செய்ய உலகம்பூரா தன்மானத் தமிழர்கள் அண்ணனோட அன்புத் தம்பிகள் குவிஞ்சுகிடக்கான்டா..
டேய் எங்க கட்சி உலகத்தமிழர்களுக்கான மாபெரும் இயக்கம்டா...
அதை மனசுல வச்சுக்கோ..
.

அன்புடன்,
இரா.ச. எழிலன்
பிசாசுக்குட்டி

(நன்றி:  சான்றுகள் தொகுக்க உதவிய நாளேடுகள், வலைத்தளங்கள் )

அப்படியே கீழ பின்னூட்டத்தில் திட்டிட்டும் போங்க ...
No comments:

Post a Comment

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.