தமிழக அரசின் சின்னமும், அரசியலும்

தமிழக அரசின் சின்னம் (தனிக்குறி) அனைவரும் அறிந்ததே. இது முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் இராமசாமி அவர்களின் ஆட்சிக்காலத்தில் முன்மொழியப்பட்டு 1949 ஆம் ஆண்டு பிரதமர் சவகர்லால் நேரு அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அப்போதைய சென்னை மாகாணமாக (சென்னை மாநிலம்) இருந்த தமிழகம் 1956 ஆண்டு உருவாக்கப்பட்ட மாநில மறுசீரமைப்புச் சட்டத்தால் (மாநில புனரமைப்பு சட்டம்) மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டு , தியாகி சங்கரலிங்கம் அவர்களின் உயிர் தியாகத்தால் 'தமிழ்நாடு' என்று அலுவல்பூர்வமாக பெயர் மாற்றப்பட்டது. அப்போது அறிமுகப்படுத்தப்பட்ட இச்சின்னம், 1968 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சின்னமாக பெயர் மாற்றப்பட்டது.
தியாகி சங்கரலிங்கனார்
இந்த சின்னம் மதுரையைச் சேர்ந்த ஓவியரான ஆர். கிருட்டிணராவ் என்பவரால் வரையப்பட்டது. அவர் மதுரையை சேர்ந்தவர் என்பதால் மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் மேற்கு கோபுரத்தை வைத்து இச்சின்னத்தை உருவாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அரசு ஆவணங்களில் அது திருவில்லிபுத்தூர் கோவில் கோபுரமென்றே பதிவாகியுள்ளதாம். இரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியார்,  தமிழக அரசுக்கு ஏற்ற முத்திரைச் சின்னமாக திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் பரிந்துரை செய்தார். இதன் பின்னாலும் ஒரு செய்தி உள்ளது.

ஓமந்தூர் ராமசாமி தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது தமிழக அரசுக்கு ஏற்ற சின்னமொன்றை வடிவமைக்கத் திட்டமிட்டனர். பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்துக் கொண்டிருந்தனர்.
ஆனாலும் முடிவுக்கு வர இயலவில்லை.

இரசிகமணி அவர்களிடம் ஓமந்தூரார் யோசனை கேட்டார். “இதற்கா இவ்வளவு சிந்தனை? தமிழ்நாடு முழுவதும் வானளாவிய கோபுரங்கள் எழுந்து நிற்கின்றனவே. அதைவிடவா தமிழ்க் கலையையும், தமிழ்ப் பண்பாட்டையும் எடுத்துக் காட்டும் சின்னம் வேறு இருக்கிறது? நம் திருவில்லிபுத்தூர் கோபுரம் மிகவும் அழகான தோற்றத்துடன் இருக்கிறது. அதையே தமிழக அரசின் சின்னமாக வைத்துவிடலாமே” என்று உடனே பதில் சொல்லிவிட்டார் இரசிகமணி.

அவரின் இந்த 'அரிய' கருத்து ஏற்கப்பட்டு தமிழ்நாட்டின் சின்னமாக திருவில்லிபுத்தூரின் கோபுரம் இடம்பெற்றுவிட்டது.
சிதம்பரநாத முதலியாரின் தாயார் பிறந்த ஊர் திருவில்லிபுத்தூர். இரசிகமணி அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் பிச்சம்மாள் அண்ணி பிறந்த ஊரும் இதே ஊர்தான். தம் மாமன்மார் மற்றும் உறவினர் வாழும் ஊர் என்பதாலும் இரசிகமணி அவர்களுக்கு திருவில்லிபுத்தூர் மனத்துக்குப் பிடித்த ஊராக இருந்து வந்தது. மேலும் அவர் திருவில்லிபுத்தூர் ஆண்டாளின் மேல் மிகுந்த பற்று கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.


திருவில்லிபுத்தூர் கோவில்
மதுரை மீனாட்சியம்மன் கோவில்
மேற்கு கோபுரம்

















இது ஒரு புறமிருக்க தமிழ்நாடு 'சென்னை மாகாணமாக' இருந்த காலத்தில் ஆங்கிலேயர்களால் 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களிலேயே வடபத்ரசாயி கோவில் என்றழைக்கப்படும் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் பொறிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.


 ஒப்பிட்டு பார்க்க



இந்நாணயங்கள் 1807 - 12 ஆண்டு காலக்கட்டங்களில் அச்சிடக்கப்பட்டு புழக்கத்தில் இருந்தவையாகும். இதில் பொறிக்கப்பட்டுள்ள ஆண்டாள் கோவில் @ வடபத்ரசாயி கோவில் கோபுரத்தின் அடிப்படையிலேயே  இப்போதைய தமிழக அரசின் சின்னம் உருவாக்கப்பட்டதாக  தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் முடிந்த ஆண்டாள் சிக்கலின் போது கூட இச்சின்னத்தைப் பற்றி எவரும் பேசியதாக தெரியவில்லை.

18.7.1967 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நவம்பர் 23, 1968 அன்று நாடாளுமன்றத்தில் சென்னை மாகாணத்துக்கு, ‘தமிழ்நாடு' எனும் பெயர் சூட்டுவதற்கான சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது. ஆக, ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் நமது அரசின் சின்னத்தின் பின்னாலிருக்கும் குழப்பம் நீங்கவில்லை.

பெரியார்வாதிகள் கேட்டால் மதுரை மேற்கு கோபுரம், நம்மவாக்கள் கேட்டாள் ஆண்டாள் சேவிச்ச வடபத்ரசாயி திருக்கோவில் கோபுரம். இப்படி விளக்கத்தை கேட்டே தான் தமிழன் காலத்தை ஓட்டியாகணும் போல.

குமரி வள்ளுவரையோ, தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தையோ சின்னமாக பயன்படுத்தியிருந்தால் அனைவருக்கும் பெருமை என்பதோடு, குழப்பங்களுல் வந்திருக்காது. திராவிட கட்டடக்கலைக்கு தஞ்சை பெரிய கோவில் இருக்கும்போது இன்னமும் ஆண்டாள் கோவிலை பிடித்து தூங்குவதன் பின்னணி தான் விளங்கப்படவில்லை.

இதன் பின்னாலிருக்கும் அரசியலும், திராவிட அமைதியும் ஆராயப்படவேண்டியது !

- எழிலன்


Comments

Post a Comment

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.