Sep 4, 2014

போதையும் பேதைகளும்

இளம் வயதினரிடையே ' மகிழ்ச்சி ' எனும் பெயரில் தற்காலத்தில் பல போதை பொருட்கள் உலா வருகின்றன. புகை , மது , பாக்கு என்று காலங்காலமாய் போய்க்கொண்டிருந்தாலும் தவறான நட்பு வட்டம் , கையில் புழங்கும் அளவுக்கு மீறிய பணம் , பெருந்தனிமை , பணிச்சுமை , மன அழுத்தம் காரணமாய் இதையும் தாண்டி புதுப்புது போதைகளை தேடி சென்றுக்கொண்டிருக்கின்றனர்.
மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து அருந்துவது , புகையிலை சாம்பலை மதுவில் தட்டி குடிப்பது முதல் நாக்கில் நச்சு பாம்பை கடிக்க விடுவது , போதை மாத்திரைகளை உட்கொள்வது , பெத்தடின் எனும் மருந்தை ஊசியின் மூலம்  நரம்புகளில் , நகக்கண்களில் ஏற்றிக்கொள்வது , ஓபியம் உருண்டுகளை விழுங்குவது , எராயின் , கெட்டாமின்  போதைப்பொடியை நுகர்வது , போதை புகை என்று நீள்கிறது இந்த வரிசை.
நச்சு பாம்பை நாக்கில் ஒருமுறை தீண்ட விடுவதற்கு பத்தாயிரம் ரூபாய்கள் வரை ஆகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரிய பணிகளில் இருப்பவர்களுக்கும் , பெரும் பணமிருப்பவர்களுக்கும் ஊக்கமூட்டும் மருந்துகளான கோக்கோயின் (வலி நிவாரண மருந்து) , எபிட்ரின் , அட்ரினலின் (ஆசுத்மா மருந்து) , கஞ்சா , சிலோசிபின் காளான்கள் போன்றவைகளையும் ,
மூக்கு வழியாக உறிஞ்சும் வகையில் , பசை , சாயத்தில் கலக்கும் கரைப்பான் , பெட்ரோல் , அறை மணக்க நாம் பயன்படுத்தும் வாசனை தெளிப்பான் , நுகர்ந்தால் சிரிக்க தூண்டும் நைற்றசு ஆக்சைடு , புடேன் , ப்ரோப்பேன் வாயுக்கள் போன்றவைகளையும் பொருளாதார வேறுபாடின்றி பயன்படுத்துகின்றனர்.

' சிவபானம் ' என்று இவர்கள் கூறிக்கொள்ளும் கஞ்சா இலையை புகையிலைப்போல தாளில் மடித்து புகைப்பிடிக்கும் கலாச்சாரமும் மிகுதியாகி வருகிறது. இது டோப் , மேரி சேன் , பாட் , சின்சிமில்லா போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது .
நம்மூரில் பக்தி பரவசம் என்று துவங்கி , சாமியார்களும் இதைத்தான் புகைக்கின்றனர் என்று பணிய வைத்து ,
கொல்லி மலை என்பது போன்ற பகுதிகளுக்கு பெருஞ்சாமியார்கள் வாழும் இடங்கள் என்று சொல்லி அழைத்து சென்று , சாமிகள் போல ஆனந்தத்தில் மிதக்கலாம் என்று இப்போதை பழக்கத்திற்கு அடிமையாக்கவும் செய்கின்றனர் சில கும்பல்கள்.
கூடவே மூலிகை சாராயமும் வேறு.
சிறிய பட்டணங்கள் முதற்கொண்டு பெருநகரப்பகுதிகளுக்கும் இதன் வரத்து உண்டு. பெருநகர்களின் புறநகர் பகுதிகளிலிருந்தும் , சற்று தொலைவிலிருக்கும் பட்டணமும் கிராமமும் சாராத சிறிய ஊர்களிலிருந்தும் இவைகள் தருவிக்கப்படுவதாகவும் தகவல்கள் உண்டு.
சிறிய பொட்டலங்கள் ஐநூறு முதல் விற்கப்படுகின்றனவாம்.
பக்தி , பரவசம் , ஆனந்தம் , துறவறம் என்று ஆசைப்பட்டு வெறும் போதைப்பரவசமே முக்தி பேரானந்தம் என்று பாதை மாறுகின்றனர்.

இந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று அறியும் ஆர்வம் ,
தூக்கம் வரவழைக்க ,  படிக்க அல்லது ஏதாவது வேலை செய்ய  தூங்காமல் விழித்து இருக்க , களைப்பை குறைக்க , வேலையின்மை, வறுமை , உள்ளக்காயமாறுதல் என்று பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் போதை பழக்கத்தின் விளைவுகள் நரம்புகோளாறுகள், மன அமைதியின்மை, தூக்கமின்மை, மறதி, பசியின்மை, மலடுதன்மை, உடல்வலி, கை கால் பலவீனம், மூளை பாதிப்பு , குடற் புண், கல்லீரல் பிரச்சனைகள் , இரத்த அழுத்தம், ஊட்டச் சத்து குறைபாடு, புற்றுநோய் துவங்கி மன நிலை பாதிக்கப்பட்டு மன நோயாளியாகவும் மாறலாம்.

கடந்த மார்ச்சு மாதம் சென்னையில் மூன்று பைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எபிடெரின் எனப்படும் தடை செய்யப்பட்ட  போதை ஊக்க மருந்து தமிழக காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டது.

இந்திய ஒன்றியங்களின் அரசு கிட்டத்தட்ட 236 வகை மருந்து மற்றும் போதைப்பொருட்களை தடை மற்றும் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறது.
இந்தியாவின் போதைப்பொருள் தடுப்பு சட்டம் - 1985 ஒருவர் ஒரு கிலோவுக்கு கீழ் போதைப்பொருள் வைத்திருந்தாலே ஆறு மாத கடுங்காவல் தண்டனையும் பத்தாயிரம் அபராதமும் விதிக்க பரிந்துரைக்கிறது. ஒரு கிலோவுக்கு மேலிருந்தால் பத்து முதல் இருபது ஆண்டுகள் வரை அபராதத்துடன் கூடிய கடுங்காவல் தண்டனையை பரிந்துரைக்கிறது.
தேசிய போதைப்பொருள் தடுப்பு சட்டம் 1985ன் படி, போதைப்பொருள் தடுப்பு ஆணையம் 1986 ஆம் ஆண்டு மார்ச் 17ம் தேதி தொடங்கப்பட்டது. இது போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை கண்காணிக்கிறது. மருத்துவ விதிமுறைகளுக்கு உட்படாத போதைப்பொருட்களை உற்பத்தி செய்தல், விற்பனைக்கு பயன்படுத்துதல் மற்றும் சட்ட விரோதமாக கடத்துதல் , பதுக்குதல்  ஆகியவை குற்றம் என இந்த சட்டம் சொல்கிறது. இதனை மீறுபவர்களுக்கு 10 முதல் 30 வருட சிறை தண்டனை மற்றும் அபராத தொகை விதிக்கப்படுகிறது. குற்றங்களின் தன்மையை பொறுத்து மரண தண்டனையும் வழங்கப்படுகிறது.


எனினும்  ,
போதைப்பொருள் பழக்கம் ஏதாவது ஒரு வகையில் நம் சமூகத்தில் ஊடுருவியே இருக்கிறது. படிப்பறிவற்ற , பொருளாதார வசதி இல்லாத அடிமட்ட தொழிலாளி மது போதையில் இருக்கிறார் என்றால் , பெருநகரங்களில் வேரோடியிருக்கும் தகவல் தொழிற்நுட்பத்துறையிலும் இதன் தாக்கம் இருக்கிறது. மிகுதியான பணிச்சுமை , மன அழுத்தம் ஆகியன மிகுதியான ஊதியம் வாங்கும் இப்பணியாளர்கள் சிலரை இந்த உலகத்திற்குள் இளைப்பாறுதல் எனும் பெயரில் இழுத்து செல்கிறது. கடற்கரை ஓய்வு விடுதிகள் , கேளிக்கை விடுதிகளில் நடைபெறும் விடுமுறை கால இளையோர் விழாக்களில் இப்போதை பொருட்கள் புழங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரியவர்கள் இப்படி இருந்தால் பள்ளி வயது சிறுவர்கள் வெள்ளை மை பூசி , பசை போன்றவற்றை மூக்கால் உறிஞ்சி போதையில் மிதக்கின்றனர். எதுவும் கிடைக்காதவர்கள் வண்டி சக்கரங்களில் ஏற்பட்ட ஓட்டையை அடைக்கும் பசையை கொளுத்தி அதன் புகையை நுகர்கின்றனர். பெட்ரோலை துணியில் ஊற்றி மூக்கில் முகர்ந்து நுகர்ந்து போதையை உணர்கின்றனர்.
போதைப்பொருட்களை பயன்படுத்தும் சிறுவர்களின் சராசரி வயது 18 லிருந்து 14 ஆக குறைந்திருக்கிறது.

சிறுவர்கள் பயன்படுத்தும் புதிய வகைப் போதை பொருட்களை தடுப்பது எப்படி ?




போதை பொருட்களின் தாக்கத்திற்கு எடுத்துக்காட்டு :




நகரமயமாதலும் ,  நவீனமயமாதலும் , மேற்கத்திய கலாச்சார தாக்கமும் இதன் மறைமுக காரணங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தாலும் , போதை பொருட்களை தடுக்கும் சட்ட விதிகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதே சிறந்த தீர்வாகும். தடுக்க தவறும் பட்சத்தில் இந்தியாவின் வளமையான இளைஞர் வளம் அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை.

- எழிலன்

No comments:

Post a Comment

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.