Jan 9, 2012

35 வது புத்தக கண்காட்சி 2012 - ஒரு ' சிறப்பு ' பார்வை


(  இப்பதிவு , தோழர்.கார்த்திகேயன் அவர்களின் பதிவான : 35 வது புத்தக கண்காட்சி 2012 - ஒரு பார்வை 
- என்பதின்  ' பிசாசுக்குட்டி பதிப்பு 1.0  ' ஆகும் . இது மாத்தி யோசி இலக்கிய வைகையை சார்ந்ததாகும்  )


சென்னையில் 35வது புத்தக கண்காட்சி புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய பள்ளியில் அருமையாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது .
ஞாயிறன்று பார்வையிட்ட இந்த கண்காட்சியை பற்றிய கட்டுரை இது

பள்ளியின் வாசலில் நுழைந்தால் இரு மருங்கிலும் அவரவர் தங்கள் பதிப்பகங்கள் பற்றிய விளம்பரங்களை வழிநெடுகிலும் வைத்துள்ளார்கள் . அவற்றிலேயே தங்கள் பதிப்பகங்களில் கிடைக்கும் சிறப்பான நூல்கள் மற்றும் கண்காட்சியில் அவர்களின் கடை எண்களையும் குறித்துள்ளார்கள் . அதிலேயே உங்களுக்கு பிடித்தமான நூல்கள் இருந்தால் , அவற்றையும் கடை எண்ணையும்  குறித்து வைத்துகொண்டு உள்ளே செல்லலாம் . இல்லாவிட்டால் வெளியே இருக்கும் மேடையின் பந்தலில் அமர்ந்து வெட்டி அரட்டை அடிக்கலாம் .
உள்ளே சிறிதுதூரம் சென்றதும் இடதுபுறமாக உங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கான இடம் ஒதுக்கியுள்ளார்கள் அங்கே சென்று வாகனத்தை விட்டுவிட்டு அதற்கான சீட்டையும் பெற்றுக்கொள்ளவேண்டும். மறக்காமல் வாகனத்தை பூட்டி விட்டீர்களா என்பதை நன்கு சோதித்துக் கொள்ளவும் வேண்டும் . இல்லாவிட்டால் உங்கள் வண்டி ஏதேனும் ஒரு திருடருக்கு பெரிய பரிசாக சிக்கிவிடும் வாய்ப்பிருக்கிறது .
பின்பு மீண்டும் பாதையை தொடர்ந்து உள்ளே சென்றால் சிறிது தூரத்தில் இடப்புறமாக ஒரு மேடையும் அதன் கீழ் பல இருக்கைகளும் இருக்கின்றன. புத்தக கண்காட்சியில் பிரபலங்களின் மேடைப் பேச்சுக்கான ஏற்பாடு இது. பொதுவாக மக்கள் கூட்டம் குறைவாக இருக்கும் இந்த பகுதியில் நேற்று மாலை ஏகப்பட்ட கூட்டம் இருந்தது காரணம் என்னவெனில் அப்துல்கலாம் அவர்கள் பேசிக்கொண்டிருந்ததுதான் . ஆனால் ஒலிபெருக்கி கருவிகள் துல்லியம் இல்லாமலும் சத்தம் சரியான அளவில் கேட்க இயலாததாகவும் இருந்தது.
மேலும் , அங்கே நம்மைப் போல் சில அறிஞர்கள் ஆங்காங்கே அமர்ந்து விவாதங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை காணலாம் . ' அப்துல் கலாம் வருகிறாரா ? அப்படியா ? ' என்று கேட்ட எங்களைப் போன்ற ஆசாமிகளும் அங்கே இருக்க வாய்ப்புகளுண்டு . ஆர்வத்துடன் அக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள முயற்சித்தால் அடிதடியே மிஞ்சும் என்பதால் தொடர்ந்து முன்னேறவும் .

அதனைக் கடந்து சென்றால் , கண்காட்சியை கண்டுகளிப்பதற்காக நுழைவுசீட்டு வாங்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு நபருக்கு ஐந்துரூபாயை செலுத்தி நுழைவுசீட்டை வாங்கிக்கொள்ளவேண்டும் . பள்ளி மாணவர்கள், 12 வயதிற்குட்பட்டோர் ஊனமுற்றோர் இவர்களுக்கு நுழைவுசீட்டு இலவசம் . கொத்து கொத்தாக சீட்டு வைத்திருக்கும் எம் படைக்கு நுழைவுச்சீட்டு பிரச்சினை இல்லையென்பதாலும் , பார்க்க கல்லூரி மாணவர்கள் மாதிரி இருப்பதென்னும்  இலவச தகுதிக்குள் இருப்பதாலும் இது நமக்கு சம்பந்தமில்லாதது என விடலாம்.


பின் கண்காட்சிக்காக அமைக்கப்பட்டுள்ள அந்த பெரிய கூடாரத்தின் உள்ளே செல்லவேண்டும். உள்ளே நுழைந்தவுடன்  நெட்டாக பாதைகளை அமைத்துள்ளார்கள். அவற்றின் இருமருங்கிலும் புத்தகக் கடைகள்.
அந்த பாதைகளுக்கு கவிஞர்களின் பெயர்களை கொடுத்துள்ளார்கள். தமிழ் கவிஞர்களின் பெயரை கொண்ட பாதைகளுக்கு நடுவில் வித்தியாசமாக ஒரு பாதை இருந்தது , வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் பாதை. அத்தனை முறை அந்த புத்தக கண்காட்சி வளாகத்தையே சுற்றியும் , எந்த பாதையும் , எங்கிருக்கிறோம் என்பதும் மண்டையில் ஏறவேயில்லை . தேவைப்பட்டால் மட்டும் அருகிலிருக்கும் பதிப்பகத்தில் பெயரை எழுத்துக்கூட்டி படித்து தெரிவிப்பதே எளிதாக இருந்தது . அதுமட்டுமன்று  , பாதையின் உள்ளே சென்ற பிறகு எந்த பாதையில் இருக்கிறோம் என்பதும் கண்டுபிடிக்க எளிதாக இல்லை . முகப்பில் இருக்கும் பதாகையை பார்த்தால் எழுத்துக்கள் வேறு தலைகீழாக தெரிகிறது ( பின்புறமிருந்து பார்த்தால் அப்படித்தானே தெரியும் ?! :)  .


நாம் உள்ளே நுழைந்தவுடன்  இடதுபுறமாக திரும்பி கடைசியில் சென்றால் முதல் பாதை வரும் . அங்கிருந்து நமது தேடுதல் வேட்டையை ஆரம்பிக்கவேண்டியதுதான் .
நாம என்னிக்கு சரியா போயிருக்கோம் என்பதால் நேரே இருக்கும் பாதையில் செல்ல வேண்டும் .
சிலருக்கு ஒரு சுபாவம் இருக்கும் அதாவது ஒரு புத்தகத்தை எடுத்தவுடன் கடைசி பக்கத்தை படிக்க ஆரம்பிப்பார்கள். அவர்கள்   உள்ளே நுழைந்தவுடன் வலதுபுறமாகத் திரும்பி கடைசியில் சென்றால் கடைசிபாதை வரும் அங்கிருந்து தனது தேடுதல் வேட்டையை ஆரம்பிக்கலாம்.
அந்த வேலைக்கும் நாம் சரிபட்டு வரமாட்டோம் என்பதால் அதையும் கடைவிடுவது நலம் . மேலும் காசை சுண்டிப்போட்டு பாதையை தேர்ந்தெடுக்கும் எங்கள் வீர விளையாட்டை யாரும் பின்பற்ற வேண்டாமென்றும் கேட்டுக்கொள்கிறோம் .
அவரவர் விருப்பத்திற்கு ஏற்றபடி பாதையில் செல்ல வேண்டியதுதான்.


பொறுமையாக அப்படியே கடைகளுக்கு உள்ளே சென்று புத்தகங்களை அலசலாம். பெண்மணிகளுக்கு அருகே நிற்கும் நம் அம்மணிகளையும் , அவர்கள் தேர்ந்தெடுக்கும் புத்தகங்களையும் வைத்த கண் வாங்காமல் கவனிக்கலாம் . கூட்ட நெரிசலென்றால் வெளியே நின்று ஒரு பார்வையை மட்டும் வீசலாம் . ( புத்தகத்தையோ , புது அகத்தையோ - அது வாசகர் விருப்பத்திற்குரியது ) .
ஆனால் உள்ளே சென்று அனைத்து புத்தகங்களையும் இடம் மாற்றிவைத்தல், கலைத்து போடுதல் ஆகிய வேலைகளை செய்யாமல் இருப்பது நலம் . அம்மணிகளும் , பதிப்பகத்தாரும் சிறுமையாய் பார்க்க கூடும் .

பார்வையிடும் போது ஒரு எளிய முறையை நீங்கள் பின்பற்றலாம் அதாவது ஒரு அம்மணியை  பார்த்துவிட்டு அவருக்கு எதிரில் இருக்கும் கடையை பார்வையிடுங்கள் . பின்பு மீண்டும் எதிர்புறமாக இருக்கும் அடுத்த கடையை பார்வையிடுங்கள் . பிறகு அம்மணியின் அம்மா யாரை கவனிக்கிறார் என்பதை பார்த்துவிட்டு மறுபடியும் அம்மணியை நோக்கலாம்.
இதன் மூலம் ஒரே பாதையில் இருமுறை நீங்கள் அலைவதை தவிர்க்கலாம் . ஏனெனில் புத்தகம் வாங்க விரும்புவோர்களுக்கும் , அம்மணிகளை பார்க்க வருவோர்களுக்கும் முழுவதையும் பார்வையிட குறைந்தது மூன்று மணிநேரம் ஆகும் .
கண்காட்சியில் அநேகமாக சத்திய சோதனை, கல்கியின் புதினங்கள், திருக்குறள் மற்றும் தமிழ் அகராதிகள் இந்த நூல்களை பல கடைகளில் காணலாம்.
இந்த முறை கண்காட்சியில் சில அரிய நூல்களை காண நேர்ந்தது . கூடவே , அரிய நண்பர்களையும் , அவர்தம் அரிய கருத்துகளையும் .  தமிழர் பயன்பாட்டு பொருட்களான கொடி அடுப்பு, குதிர், உலக்கை ஆகியவற்றை படங்களாகக்கொண்ட நூல், திருவாசகத்திலிருந்து மறைக்கப்பட்ட ஞானத் தாழிசை, யுவான் சுவாங்கின் பயணகுறிப்புகளின் தமிழ் பதிப்பு. சன் சு எழுதிய The Art of War என்ற நூலின் தமிழ் பதிப்பு , சுண்டல் கிலோவே பதினெட்டு தான் நீயென்ன பொட்டலம் பத்து ரூவாய்க்கு விக்கிற , ரிலையன்சில் ரீ சர்ட் வாங்கினால் எண்பது தான் , இங்கே வாங்கினால் முன்னூறு , அந்த பெண் அப்பா கூடவே வந்திருக்கலாம் , இங்க சாப்பிடறோம் , இங்க சாப்பிடறோம் ஆகியன அவற்றுள் சில.
சத்திய சோதனை மலிவு விலை வசனமாக எங்கும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொலைகாட்சியில் வெளிவந்த பல தொடர்களும் , சில ஆங்கில திரைப்படங்களின் கதைகளும் நூல்களாக நண்பர்களின் வசனங்களில் கிடைகின்றன.

உலக அளவில் பிரபலமான பெங்குவின் பிரஸ் தனது முகமையாளராக ஒரு பதிப்பகத்தை தேர்ந்தெடுத்து அவற்றின் நூல்களை அங்கு காட்சிக்கு வைத்திருக்கிறது , அங்கு வரும் ரீ சர்ட் போட்ட பெண்களை நாங்கள் காண .  ஆனால் ஒரு விஷயம்  , அங்கு கிடைக்கும் பெரும்பாலான புத்தகங்கள் தமிழில் மலிவுவிலையில் வேறு கடைகளிலும் கிடைகின்றன. ஆனால் சுரிதார் பெண்கள் மட்டுமே வருவதாக செய்திக்குறிப்போன்று தெரிவிக்கிறது .
மேலும் ஒரு முக்கியமான விஷயமும் புலப்பட்டது . அதாவது பல பேர் புத்தகங்களின் அட்டையை பார்த்து மயங்கி விழுகுகிறார்கள் என்பது . ஆதலால் உள்ளே நன்கு படித்து பார்த்து வாங்கலாம் அல்லது தமிழ் தெரிந்தவரை படிக்க வைத்து வாங்கலாம் .


ஒரு  பாதையின் முடிவை நெருங்கிய போது சிலுசிலுவென்று குளிர்ந்த காற்று வீசியது. குளிர்சாதன வசதி செய்திருக்கிறார்களா என்று ஆராய்ந்து பார்த்ததில் பதிப்பகத்தில் வாயிலில் அம்மணிகள் நின்றுக்கொண்டிருந்தார்கள் . எங்கள் மன சாந்தி காற்றோட்டதிற்கான நல்ல ஏற்பாடு இது .


அதிக கூட்டத்தின் காரணமாக பசங்க கரியமிலவாயு பெருக்கமும், இளம் பெண்கள் பிராணவாயு குறைவும் ஏற்படுவதால் சிறிது நேரத்திலேயே பலர் சோர்ந்து விடுகிறார்கள். மேலும்  ஒன்பதாவது , பத்தாவது பாதைகளை கடக்கும் போது கண்டிப்பாக காதில் சிறிது வலி ஏற்படும். ஆகையால் எல்லா கடைகளுக்குள்ளும் வெறும் காதோடு வெறித்தனமாக புகுவதை தவிர்க்கலாம் .


முக்கியமான விடயம் , உள்ளே சில புத்தக விற்பனையாளர்கள் இருப்பார்கள் . அவர்களை விற்பனையாளர்கள் என்பதை விட விற்பன்னர்கள் என்பது தகும் . ஏனெனில் அவர்கள் படுதிறமைசாலிகள் . அவர்கள் கொடுக்கும் பிரசுரங்களில் கதை , பொருள் , கருத்து  இவை மூன்றையும் காண்பது மிக அரிது . அதன் விலையும் அதிகம் . அவர்களை எதிர்ப்பார்த்து நீங்கள் உள்ளே வராமல் இருப்பதே நலம்.


அங்கு இரண்டு வித்தியாசமான கடைகளையும் காண நேர்ந்தது ஒன்று எலுமிச்சை தேநீர் விற்பனை செய்யும் கடை . அங்கு கிடைக்கும் தேநீர்களின் விலை .......... இருங்க வாங்கிக்கொடுத்த நண்பனை கேட்டு சொல்றேன் .


மற்றொன்று ஒரு வட இந்திய உணவு கடை . பீட்சா , பர்கர் , சிக்கான்கொக்கா , கபாப்  ஆகியன குறிப்பிடத்தக்கது. அந்த கடையில் பலர் குழுமி இருந்தாலும் யாரும் பொருட்களை வாங்குவதாக தெரியவில்லை. ஏனெனில் விலை அதிகம். நம் மக்கள் அந்த பொருட்களை தொட்டும் தடவியும் பார்க்கிறார்கள். விலைகேட்கிறார்கள் சுவற்றில் அடித்த பந்தென திரும்பி செல்கிறார்கள். நாம் தான் பள்ளி கல்லூரி நாட்களிலேயே அவற்றை விரும்பியது கிடையாதே. பாவம் அந்த வடஇந்தியர்கள்  விலை சொல்லி சொல்லி சோர்ந்துவிட்டிருந்தார்கள்.


சரசுவதி உணவு சேவை நிறுவனம் கசங்கிய சாயம்போன உணவுகளை பார்வைக்கு வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் பாதி தெலுங்கு , கன்னட , வட இந்தியம். அங்கு கிடைக்கும் டோக்லா வாங்கலாம். பெருமளவில் தமிழ் பணியாற்றிவரும் மிதிவண்டி விற்பனையாளரும் குறிப்பிடும் படியான உணவுகளை காட்சிப்படுத்தவில்லை .


ஒட்டு மொத்தமாக எல்லாவற்றையும் பார்வையிட்டு சில இலவச  துண்டு பிரசுரங்களுடன் வெளியே வந்தால் அப்பள வகையறாக்கள், பீசா பர்கர், நொறுக்குத்தீனிகள் ஆகியவை கொண்ட கடைகள் இருக்கும். அவற்றை உண்டுவிட்டு அப்பிரசுரங்களில் கைத்துடைக்க வசதியாய் இருக்கும் . சிலர் அங்கும் சென்று கடன் வைக்கிறார்கள் , இரு கைகளையும் கட்டிக்கொண்டு வெறித்து பார்த்து விட்டு ஓடி வந்துவிடுகிறார்கள் .


பல நல்ல நொள்ள ஆலோசனைகள் :

 • வார நாட்களில் செல்கிறீர்களா அல்லது விடுமுறை நாட்களில் செல்கிறீர்களா என்பதை முதலில் சரியாக முடிவெடுத்து அதற்கேற்கு நேரெதிராக உங்கள் பயணத்தை திட்டம் தீட்டுங்கள் .
 • ஆன்மிக நூல்கள், உங்கள் துறைசார்ந்த நூல்கள், உங்களுக்கு இருக்கும் கலை ஆர்வம் சார்ந்த நூல்கள், அல்லது கதை கவிதை போன்ற  பொழுதுபோக்கு நூல்கள், அல்லது மூளையில் தகவல்களை சேகரிக்கும்  நூல்கள் இவற்றில் எதை வாங்கவேண்டும் என்று முடிவு செய்துகொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து வாங்கவே வாங்காதீர்கள் .
 • நீங்கள் ஒரு கடையில் ஒரு நூலை வாங்கவேண்டும் என விரும்பினால் உடனே வாங்காதீர்கள். கடையின் எண்ணை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதை நான்கோடு கூட்டி ஆறை கழியுங்கள் எட்டால் வகுத்து முப்பதால் பெருக்கி கொள்ளுங்கள் . அதிக நினைவாற்றல் கொண்டவராக இருந்தால் கடையின் எண்ணை எழுதி கத்திக் கப்பல் செய்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அதே போன்ற கப்பலை  விலை குறைவாகவோ அல்லது இன்னும் சிறப்பாகவோ வேறு ஒரு கடையில் நபரிடம்  பார்த்தால் அவசரப்பட்டுவிட்டோமே என வருந்த நேரிடும். அதே போன்ற நூல் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் வந்து குறித்த எண் கொண்ட கடையில் உங்கள் புத்தகங்களை காசு கொடுத்து வாங்கலாம். இல்லை இந்த நூலை கண்டிப்பாக காசில்லாமல் திறமையால் வாங்கலாம் என்று நூறு சதவிதம் நினைத்தால் அங்கேயே திருடிவிடுங்கள்.
 • சில நூல்கள் பெரிய அளவில் ( பக்க எண்ணிக்கையில் அல்ல எடையில் ) இருக்கும் . அவற்றை தவிர்ப்பது நலம் . ஏனெனில் அவற்றை படிப்பதும் பயன்படுத்துவதும் இளமையாக இருக்காது.
 • முடிந்த அளவு அழகான பெண்களை பார்க்காமல் செல்லுங்கள் . உங்கள் பிராணசக்தியையும் ஆற்றலையும் சிதறடிக்காமல் கடைசிவரை விசிலடித்துக்கொண்டே செல்லலாம். ஏனெனில் அதிக அளவு மூளையையும் கண்களையும் பயன்படுத்துவதால் பிராணசக்தி குறைந்து சோர்வு ஏற்படும்.  ஆற்றலை கண் வழியாக வெளியிடாமல் இருப்பது நலம்.
 • வாகன சீட்டை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் . கழட்டி எடுத்து வருவது உத்தமம் .
 • எல்லா கடைகளில் நிற்பதையும் , எல்லா நூல்களை கலைப்பதையும் தவிருங்கள்.
 • உள்ளே கிடைக்கும் தின்பண்டங்களுக்கு செலவிடும் முன் சிறிது வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் .
 • புத்தகங்களின் அட்டையை பார்த்து வாங்காதீர்கள். முதலில் புத்தக ஆசிரியர் யார் என்று பாருங்கள். பின்பு உள்ளே நிறைய படங்கள் இருக்கிறதா என  பார்த்து வாங்குங்கள்.
 • தயவு செய்து சித்தர்களின் பாடல்களுக்கு விளக்க உரைகள் கொண்ட நூல்களை வாங்காதீர்கள். சினிமா பாடல்களை மட்டும் தனியே வாங்குங்கள் அல்லது வாங்காமலே இருந்து விடுங்கள். நாமே நமக்கேற்றவாறு விளக்கங்கள் வீணாக கொடுத்துக் கொள்ளலாம் . 

  ஆசிரியர் மறந்த குறிப்புகள் :
 • தம்மடிக்கும் பழக்கமிருந்தால் வரும்வழிலேயே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் . அருகில் கடை யு கே விண்ணப்பம் அளிக்கும் அலுவலகம் அருகே மட்டுமே தள்ளுவண்டியில் எக்கச்சக்க விலையில் ( சில சில்லறைகள் அதிகமாக ! ) கிடைக்கிறது . பாத்து போட்டுக் கொடுக்க சொன்னால் குறைக்கிறார்கள் .
 • கழிவறையோ , தம்மடிக்க இடம் தேடியோ அலைய வேண்டி வருமோ என எண்ண வேண்டாம் . நாம் என்ன கல்லூரி விழாவிற்கா வருகிறோம் ?! அருகே இருக்கும் ஒதுக்குபுறமான இடத்தில் தம்மடிப்பவர்கள் , கழிவறை செல்பவர்களின் நடமாட்டம் எப்போதும் இருக்கிறது . தீப்பெட்டி கவலையும் வேணாம் . சிகரெட் கேட்டால் மட்டும் ஒருவேளை வெட்டுக்குத்து வரலாம் .
 • புத்தகங்களை விட புத்தகங்களைத் தேடி அலைந்த பின் பசிக்குத் தேடும் உணவுகள் விலை அதிகம் என்பதால் வீட்டிலிருந்தே வாங்கி வந்து விடுவது நலம் .
 • அம்மணிகளை காண வருபவர்கள் முதலில் பந்தலுக்கு சென்று அமர வேண்டும் . நண்பர்களுடன் வரும் அன்பர்கள் அன்புடன் நாற்காலிகளைப் போட்டு வட்டமைக்க வேண்டும் . கண்கள் நாலாபுறமும் சுழல் விளக்கு போல சுழன்று கொண்டேயிருக்க வேண்டும் . நாங்கள் செல்லும்போது நந்தவனத்தின் நடுவே நொந்தக்குமாரர்களாக  ' அன்பு தொல்லையால் ' மாட்டிக்கொள்ள நேர்ந்தது .
 • உணவகத்திற்கு சென்று ஒரு காபி மட்டும் பருகுவது நல்லது . விலையைக்கேட்டால் காபி இனிக்க மறுக்கிறது . பேச்சிலும் கவனம் தேவை . தேவையில்லாது சாம் ஆண்டர்சனைப் பற்றியும் , பவர் சீனிவாசனைப் பற்றியும் பேசி  , அருகே அமர்ந்திருந்த கல்லூரி மாணவர்கள் எங்களிடம் கதை கேட்டு அவரை கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள் .
 • அந்த உணவகத்தில் உண்பதற்கு பேசாமல் நான் சாப்பிடுவதை குறைத்து விட்டேன் என்று கூறிக்கொண்டு திரியலாம் . காசுக்கு வந்த தலைவலி . நண்பர் காசு கொடுப்பதாக இருந்தால் இந்த அறிவுரை பொருந்தாது .
 • நண்பர்களுடன் வருவது சாலச் சிறந்தது .
  தனியாக இலக்கிய அப்பாடக்கர் மாதிரி வர முயற்சிப்பதற்கு வீட்டிலேயே இருந்துவிடலாம் . நண்பர்கள் அடிக்கடி தோள் கொடுக்கிறார்கள் , துட்டும் கூட .
 • வீட்டிலிருந்து கிளம்பும்போதே அளவற்ற சாப்பாடு இரண்டு உண்டுவிட்டு வருவது மிக நல்லது . பகாசூரனாக இருந்தாலும் இரு வட்டம் போடுவதற்குள்ளாகவே ' பிசாசு ' பசி பசிக்கிறது . குடிநீர் போத்தல் இருந்தால் நலம் . பசியில் இரத்தம் வியர்வையாக உருமாறி வருவதை உணரலாம் . முடிந்தால் அருகிலிருக்கும் பதிப்பகத்தில் கதை சொல்லி சுடச்சுட கதை வெளியிடலாம் . அதற்காகவாவது சோறு கிடைக்கலாம் .
 • பதினாறு , பதினேழு ரூவாய் மதிப்புடைய எரிடேச் சுவையூட்டப்பட்ட பால் போத்தலை இருவது ரூவாய்க்கு மனசாட்சியுடன் விற்கிறார்கள். குடிக்கும்போது சுவையான மசாலா பால் ஐந்து ரூவாய் என்னும் பதாகை கண்ணில் படுகிறது . எங்கள் ஊர் பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் கடையின் நினைவில் .
 • விலையன்றி எது கொடுத்தாலும் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் . காகிதங்களை காப்பாற்றுங்கள் குப்பைத்தொட்டிகளையும் தான் .
 • அடிக்கடி பார்வை வீசி விடுங்கள் . சிக்கலாம் , நல்ல புத்தகங்கள் .
 • சரவண பவன் மேற்பார்வையாளர் தோணியில் நிற்பவரை கண்டால் ரெண்டு வடை ஒரு காபி என பதிவு செய்துவிடாதீர்கள் . அவர்கள் சிறப்பு காவல் துறையினர் . உங்களை அழைத்து சென்று சிறப்பாக கவனிக்கலாம் .
 • எங்கேனும் பெரிய வட்ட வடிவ கும்பல்களை காண்கிறீர்களா ?? எட்டிப் பாருங்கள் . உங்கள் அபிமான நட்சத்திரங்களாக இருக்கலாம் .
 • மிக முக்கிய குறிப்பு : மாலை வேளைகளில் மறந்தும் பெரிய அரங்க நாற்காலிகள் அமர்ந்து விடாதீர்கள் . தன்னைக் காணத்தான் இவ்வளவு கூட்டமென நினைத்துக்கொண்டு கவியரங்கம் நடத்த துவங்கி விடுகிறார்கள் . அதில் மாட்டிக்கொள்ளும் நண்பர்களுக்கு உயிர் காக்க உதவுங்கள் .
கபம் !


( பனியில் சுற்றுவதால் )

1 comment:

 1. அருமையான பதிவு.வருகிற பொங்கலுக்கு போகலாம்னு முடிவு செய்தாகி விட்டது.

  டிப்ஸ்க்கு நன்றி.

  மொத்ததுல பணம் பத்திரம்ன்னு சொல்றீங்க... ஓகே.. வெயிட்டான நண்பர்களையும் அழைத்து கொள்ளலாம் என இப்போது முடிவு செய்துருக்கேன்... ஜமாய்சுடலாம்...

  ReplyDelete

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.